"விண்வெளித் துறையிலும், விளையாட்டிலும் முன்னேற்றம்" - பிரதமர் மோடி பெருமிதம்
விண்வெளித் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் தொழிலாளர்களின் பிள்ளைகள் பதக்கங்களை வென்று முன்னேறியுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பித்தபோது குடிமக்களின் வாழ்வுரிமை, தனிமனிதச் சுதந்திரம் உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புகழ்பெற்ற பாடகர் கிசோர் குமார் அரசைப் போற்றிப் பாட மறுத்ததால் அவர் பாடல்களை வானொலியில் ஒலிபரப்பத் தடை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
விடுதலையின் 75ஆண்டு விழாவைக் கொண்டாடும் நாம் நெருக்கடி நிலை என்னும் இருண்ட காலத்தை மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்தார்.
சென்னை, ஐதராபாத் நகரங்களைச் சேர்ந்த அக்னிகுல், ஸ்கைரூட் நிறுவனங்கள் சிறிய செயற்கைக் கோள்களை ஏவும் ராக்கெட்டுகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த துருவா ஸ்பேஸ் நிறுவனம் செயற்கைக் கோள்களுக்கான சோலார் பேனல்களைத் தயாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், ஸ்ரீநகரைச் சேர்ந்த தையல்காரர் மகன் அடில் அல்டாப் 70 கிலோமீட்டர் தொலைவு மிதிவண்டிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையும், சென்னையைச் சேர்ந்த தச்சரின் மகன் தனுஷ் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றதையும் நினைவுகூர்ந்தார்.
புதுச்சேரி, காரைக்காலில் தன்னார்வலர்களும், நிறுவனங்களும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தியதையும் குறிப்பிட்டார். குடிநீர்த் தேவைக்காக முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகள் குப்பைத் தொட்டிகளாக மாறியுள்ளது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார்.
Comments